எஸ்.ஏ. கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் புத்தக வாசிப்பு குறித்த சிறப்பு சொற்பொழிவு பிப்ரவரி 12.02.2025

*எஸ்.ஏ. கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் புத்தக வாசிப்பு குறித்த சிறப்பு சொற்பொழிவு*

எஸ்.ஏ. கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் நூலகத்துறை, தமிழ்த்துறை மற்றும் இந்திய அறிவு அமைப்பு ஆகியவை இணைந்து 'புத்தகம் வாசிப்பும் நேசிப்பும்' என்ற தலைப்பில் சிறப்புச் சொற்பொழிவை பிப்ரவரி 12,  2025 அன்று கல்லூரிக் கலையரங்கில் நடத்தின. ஆரோக்கியமான புதிய சிந்தனைகளை வளர்ப்பதற்கும்,  புதியனவற்றைக் கற்றுக் கொள்வதற்கும்,  புதிய கண்டுபிடிப்புகளுக்கும் தேவை நல்லதொரு புத்தக வாசிப்புப் பயிற்சி.  இத்தகைய நல்ல நூல்களைத் தேடிப் படித்து,  மாணவர்களின் வாசிப்புப் பழக்கத்தை மேம்படுத்துவதனை நோக்கமாகக் கொண்டு  இந்நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டது. இந்நிகழ்ச்சியின் சிறப்பு விருந்தினராக மேலசிவபுரி கணேசர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் மேனாள் நூலகரும்,  நூலகம் மற்றும் தகவல் அறிவியல் துறை மேனாள் துறைத்தலைவருமான முனைவர் ந. முருகேச பாண்டியன் கலந்துகொண்டு சிறப்பித்தார். தமிழ்த்துறை உதவிப் பேராசிரியர் திரு. க. வீரராகவன் விழாவுக்கு வந்தோரை வரவேற்று வரவேற்புரை வழங்கினார்.‌ தமிழத்துறை இணைப் பேராசிரியர் முனைவர் ஈ. இசக்கியம்மாள் சிறப்பு விருந்தினரை அவைக்கு அறிமுகம் செய்து வைத்தார். தமிழ்த்துறைத் தலைவர் திரு. மா. விஜயகுமார் சிறப்பு விருந்தினருக்குப் பொன்னாடை அணிவித்துச் சிறப்புச் செய்தார்.‌ 

     தொடர்ந்து கற்றல் என்பது நம்மை என்றும் உயிர்ப்புடன் வைத்திருக்கக் கூடியது;  இன்பம் பயக்கக்கூடியது;  சமூகத்தில் நம்மை நிலைநிறுத்தக்கக் கூடியது என்பதனைப் பல இலக்கியச் சான்றுகளையும்,  பல நூல்களையும் எடுத்துரைத்துப் புத்தக வாசிப்பின் முக்கியத்துவத்தைச் சிறப்பு விருந்தினர் வலியுறுத்தினார். நிகழ்ச்சியின் நிறைவாகத் தமிழ்த்துறை உதவிப் பேராசிரியர் முனைவர் பா.விக்னேஷ் குமார் நன்றியுரை வழங்கினார். இந்நிகழ்ச்சி தமிழ்த்துறை உதவிப் பேராசிரியர் திருமதி அ. விஜயலட்சுமி அவர்களின் தொகுப்புரையுடன், தமிழ்த்துறை உதவிப் பேராசிரியர்கள் திரு. க.  வீரராகவன் மற்றும் ம. ரம்யா ஆகியோரை ஒருங்கிணைப்பாளர்களாகக் கொண்டு மிகச் சிறப்பாக நடைபெற்றது.


எஸ்.ஏ. கல்லூரியில் திருமதி சகுந்தலா அம்மாள் நினைவு கலை இலக்கியப் போட்டிகள் பரிசளிப்பு விழா 30.01.2025

எஸ்.ஏ. கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் தமிழ்த்துறை,  திருமதி சகுந்தலா அம்மாள் நினைவு மற்றும் பொங்கல் விழா பள்ளி மாணவர்களுக்கான கலை இலக்கியப் போட்டிகளை ஜனவரி 4,  2025 அன்று நடத்தியது. கலை இலக்கியப் போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கான பரிசளிப்பு விழா ஜனவரி 30,  2025 அன்று கல்லூரிக் கலையரங்கில் நடைபெற்றது. சிறப்பு விருந்தினராகச் சென்னை உயர்நீதிமன்ற மேனாள்  நீதிபதி மாண்பமை நீதியரசர் முனைவர் ப. ஜோதிமணி அவர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தார். கல்லூரித் தாளாளர் திரு. ப. வெங்கடேஷ் ராஜா அவர்களின் தலைமையில் பரிசளிப்பு விழா மிகச் சிறப்பாக நடைபெற்றது. இளம் வணிகவியல் முதலாம் ஆண்டு மாணவர் ர.ஹே. கிஷோர் வரவேற்புரை நிகழ்த்தினார்.‌ கல்லூரி இயக்குநர் முனைவர் சாய் சத்யவதி முன்னிலை உரை நிகழ்த்தினார். கல்லூரி முதல்வர் முனைவர் மாலதி செல்வக்குமார் வாழ்த்துரை வழங்கினார். போட்டி பற்றிய அறிகையைத்  தமிழ்த்துறைத் தலைவர் திரு. மா.விஜயகுமார் வாசித்தார்.‌

சிறப்பு விருந்தினர் மாண்பமை நீதியரசர் முனைவர் ப.  ஜோதிமணி அவர்கள் ஒழுக்கத்தின் மாண்பினையும், சுற்றுச்சூழல் பாதுகாப்பையும் பற்றிக் குறிப்பிட்டு இயற்கை வளங்களைக் காக்குமாறு அவையோரை வலியுறுத்தினார். அதைத்தொடர்ந்து போட்டிகளில் பரிசு பெற்ற மாணவர்களின் உரைகளும்,  நடனங்களும் நடைபெற்றன. போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்குச் சான்றிதழ்களும், பரிசுத் தொகையும்,  நூல்களும் பரிசுகளாக வழங்கப்பட்டன. இளம் வணிகவியல் கணினிப் பயன்பாட்டியல் துறை இரண்டாம் ஆண்டு மாணவி ஜா. ஷபரிதா நன்றியுரை வழங்கினார்.  இளம் வணிகவியல் முதலாம் ஆண்டு மாணவியர் ரா. கீர்த்திகா மற்றும் ஷாசின் பாத்திமா ஆகியோர் நிகழ்ச்சியை அழகுறத் தொகுத்து வழங்கினர். பள்ளி மாணவர்களின் கலைத்திறனையும் படைப்பாக்கத் திறனையும் ஊக்குவிக்கும் வண்ணம் இந்நிகழ்ச்சி மிகச் சிறப்பாக நடைபெற்றது.


எஸ்.ஏ. கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் இரண்டு நாள் புத்தகக் கண்காட்சி 30.01.2025 to 31.01.2025

எஸ்.ஏ. கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் நூலகத் துறை  மற்றும் தமிழ்த்துறை இணைந்து புத்தகக் கண்காட்சியை ஜனவரி 30 மற்றும் 31 ஆகிய இரண்டு நாட்களில் நடத்தின. புத்தகக் கண்காட்சியின்  முதல் நாளான ஜனவரி 30, 2025 அன்று நடைபெற்ற தொடக்க விழாவில்  இயக்குநர் சாய் சத்யவதி, முதல்வர் முனைவர் மாலதி செல்வக்குமார், மேலாண்மைப் பள்ளி இயக்குநர் முனைவர் ஆர். விஜி ஆகியோர் பங்கேற்றனர். சிறப்பு விருந்தினர் முனைவர் பி.கே. மாதவன் 'புத்தகங்களில் பிறந்தவன்'என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார். தொழில்முறைக்  கணக்காளர் திரு. ஆவிச்சி கிருஷ்ணன் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு சிறப்பித்தார்.  அவர் 'நூலகம்: உலகை வெல்வதற்கு விதைகளை விதைப்பதற்கான இடம்'  என்ற தலைப்பில் உரை நிகழ்த்தி, நூலகங்களின் முக்கியத்துவத்தை எடுத்துரைத்தார்.

புத்தகக் கண்காட்சியின் இரண்டாம் நாளான ஜனவரி 31,  2025 அன்று  தொலைக்காட்சி புகழ் மற்றும் தன்னம்பிக்கைப் பேச்சாளர் திருமதி ரம்யா அசோக் அவர்கள் உரை நிகழ்த்தினார்.

இந்த நிகழ்வில் தி இந்து  பப்ளிகேஷன், கோரல் பப்ளிஷர்ஸ், சிஎஸ்பி புக்ஸ், விஜய் நிக்கோல் இம்ப்ரிண்ட்ஸ் பிரைவேட் லிமிடெட், விஆர்1 பப்ளிஷர், கல்யாணி பப்ளிஷர் மற்றும் ஹிந்துஸ்தான் புக்ஸ் போன்ற புகழ்பெற்ற பதிப்பகங்களின் புத்தகக் கடைகள் இடம்பெற்றன. புத்தகக் கண்காட்சியைப் பல்வேறு துறைகளைச் சேர்ந்த மாணவர்களும் பேராசிரியப் பெருமக்களும் ஆர்வத்துடன் புத்தகக் கடைகளைப் பார்வையிட்டுப் புத்தகங்கள் வாங்கி மகிழ்ந்தனர். இந்நிகழ்வு புத்தக ஆய்வுக்கான சிறந்த தளத்தை வழங்கியதோடு மட்டுமல்லாமல், கல்வி மற்றும் அறிவுசார் வளர்ச்சியில் நூலகங்களின் முக்கியத்துவத்தை வலுப்படுத்தியது.

 


எஸ்ஏ கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் நாட்டு நலப் பணித்திட்டத்தின் சார்பாக இரும்பின் தொன்மை நூல் வெளியீட்டு விழா மற்றும் கங்கைகொண்ட சோழபுரம் அருங்காட்சியகம் அடிக்கல் நாட்டு விழா 24.01.2025

எமது எஸ்.ஏ. கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் நாட்டு நலப் பணித்திட்டத்தின் சார்பாக இரும்பின் தொன்மை நூல் வெளியீட்டு விழா மற்றும் கங்கைகொண்ட சோழபுரம் அருங்காட்சியகம் அடிக்கல் நாட்டு விழா கீழடி அருங்காட்சியகம் திறப்பு விழா சார்ந்த தமிழக அரசின் நிகழ்ச்சிக்கான காணொளிக் காட்சியினை எமது கல்லூரி மாணவர்கள் அரங்கில் கண்டு மகிழ்ந்தனர். அதற்கான நிழற்படம் இத்துடன் இணைக்கப்பட்டுள்ளது. 


எஸ்.ஏ. கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் தமிழ்த் துறையின் சார்பிலும் காட்சித் தொடர்பியல் துறை சார்பிலும் ஜெம் டிவியோடு இணைந்து மாபெரும் பொங்கல் சிரிப்பு சிந்தனைப் பட்டிமன்றம் 7.1.2025 அன்று நடைபெற்றது.

எஸ்.ஏ கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் பொங்கல் பட்டிமன்றம்.

திருவேற்காடு எஸ்.ஏ. கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் தமிழ்த் துறையின் சார்பிலும் காட்சித் தொடர்பியல் துறை சார்பிலும் ஜெம் டிவியோடு இணைந்து மாபெரும் பொங்கல் சிரிப்பு சிந்தனைப் பட்டிமன்றம் 07.01.2025 அன்று நடைபெற்றது.

தேவகோட்டை சேவகன் அண்ணாமலை கல்லூரியின் தமிழ்த் துறைத் தலைவர் திரு.பாகை கண்ணதாசன் அவர்கள் நடுவராகப் பொறுப்பேற்றுப் பண்பாட்டைக் கட்டிக் காப்பது கிராமமா? நகரமா? என்னும் தலைப்பிலான பட்டிமன்றத்திற்குச்சுவை கூட்டினார். இரு அணிகளும் பிரபல தொலைக்காட்சிப் பேச்சாளர்கள் பேராசிரியர் அன்பு கவிஞர் நித்தியப்பிரியா, திரு. தேவகோட்டை லட்சுமி நாராயணன், திரு. டோக்கியோ ராமநாதன், திருமதி. கல்பனா தர்மேந்திரா, செல்வி சாகித்யா ஆகியோர் மிகச் சிறப்பாகத் தங்கள் கருத்துக்களை எடுத்துரைத்தனர்.

சிரிப்பும் சிந்தனையும் நிறைந்த இப்பட்டிமன்றத்தைக் கல்லூரி மாணவர்கள் வெகுவாக ரசித்தனர். இந்த நிகழ்ச்சிக்குக் கல்லூரியினுடைய தாளாளர் திரு. ப. வெங்கடேஷ் ராஜா அவர்கள் தலைமை தாங்கினார். கல்லூரி இயக்குநர் முனைவர் சாய் சத்யவதி அவர்களும் கல்லூரி முதல்வர் மாலதி செல்வக்குமார் அவர்களும்  இப்பட்டிமன்றத்திற்கு வருகை தந்தோரை வரவேற்றனர். கல்லூரியின் சார்பாகப் பேச்சாளர்கள் அனைவருக்கும் நினைவுப் பரிசுகள் வழங்கப்பட்டன. விழா நிறைவில் தமிழ்த் துறைத் தலைவர் பேராசிரியர் மா. விஜயகுமார் நன்றியுரை வழங்கினார்.


எஸ்.ஏ. கல்லூரியில் நடைபெற்ற திருமதி சகுந்தலா அம்மாள் நினைவு கலை இலக்கியப் போட்டிகள் ஜனவரி 4,  2025

எஸ்.ஏ. கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் தமிழ்த்துறை,  பள்ளி மாணவர்களுக்காகத் திருமதி சகுந்தலா அம்மாள் நினைவு கலை இலக்கியப்போட்டிகளை ஆண்டுதோறும் நடத்தி வருகிறது. அவ்வண்ணமே இந்த ஆண்டும் சகுந்தலா அம்மாள் நினைவு கலை இலக்கியப் போட்டிகளை ஜனவரி 4,  2025 அன்று மிகச் சிறப்பாக நடத்தியது. 6,7,8 ஆம் வகுப்பு மாணவர்களுக்கும், 9 முதல் 12 ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கும் என இரு பிரிவுகளில் தமிழ்ப்  பேச்சுப்போட்டி, ஓவியப் போட்டி, நடனப் போட்டி ஆகிய போட்டிகள் நடத்தப்பட்டன. கலை இலக்கியப் போட்டிகளின் தொடக்க விழாவிற்குச் சிறப்பு விருந்தினராகப் பிரபல ஊடகவியலாளரும், சென்னை அப்துர் ரஹ்மான் கிரசண்ட்  தொழில்நுட்ப நிறுவன தமிழ்ப் பேராசிரியருமான முனைவர் அ. நசீமா கலந்து கொண்டு சிறப்பித்தார்.      

     தொடக்க விழா கல்லூரித் தாளாளர் திரு. ப. வெங்கடேஷ் ராஜா அவர்கள் பேராதரவோடு சிறப்பாக நடைபெற்றது. விழாவில் கல்லூரி இயக்குநர் முனைவர் சாய் சத்யவதி கவிதை வாசித்துக் கருத்துரை வழங்கினார். முதல்வர்  முனைவர் மாலதி செல்வக்குமார் வாழ்த்துரை  வழங்கினார். தமிழ்த்துறை உதவிப் பேராசிரியர் திருமதி அ.  விஜயலட்சுமி வரவேற்புரை வழங்க, தமிழ்த்துறைத் தலைவர் திரு. மா. விஜயகுமார் போட்டிகளில் கலந்து கொள்ளும் பள்ளிகளைக் குறித்து அறிமுக உரை நிகழ்த்தினார்.  உதவிப் பேராசிரியர் பிரியா சிறப்பு விருந்தினர் குறித்த அறிமுக உரையையும், உதவிப் பேராசிரியர் முனைவர் ஏ. சித்ரா நன்றியுரையையும்  நிகழ்த்தினர். இணைப் பேராசிரியர் முனைவர் ஈ.இசக்கியம்மாள் இணைப்புரை வழங்கி நிகழ்ச்சியைத்தொகுத்து வழங்கினார்.தமிழ்த்துறைப் பேராசிரியர்களின் சிறப்பான ஒருங்கிணைப்பின்படி நடைபெற்ற இப்போட்டிகளில் சென்னைப் பெருநகரில் உள்ள 76 பள்ளிகளைச் சேர்ந்த  284 மாணவர்கள் கலந்து கொண்டனர். போட்டிகளில் கலந்து கொண்ட அனைத்து மாணவர்களுக்கும் பங்கேற்புச் சான்றிதழ் வழங்கப்பட்டன. கலை இலக்கியப் போட்டியின்  பரிசளிப்பு விழா விரைவில் நடைபெறும்.


எஸ். ஏ கலை மற்றும் அறிவியல் கல்லூரி தமிழ்த்துறை மற்றும் கிருஷ்ணா ஸ்வீட்ஸ் இணைந்து நடத்திய மகாகவி பாரதியார் பிறந்த நாள் சிறப்பு நிகழ்ச்சி டிசம்பர் 12, 2024

எஸ். ஏ. கலை மற்றும் அறிவியல் கல்லூரி தமிழ்த்துறை மற்றும் கிருஷ்ணா ஸ்வீட்ஸ் இணைந்து நடத்திய மகாகவி பாரதியார் பிறந்த நாள் சிறப்பு நிகழ்ச்சி

டிசம்பர் 12, 2024 அன்று எஸ். ஏ. கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் பாரதியின் பிறந்தநாளிற்கு "மெல்லிய தமிழுக்கு மீசை முளைத்தது" என்ற தலைப்பில் பேராசிரியர் திரு. த. அன்பு (எம்.ஜி.ஆர் நிகர்நிலைப் பல்கலைக்கழகம்) அவர்கள் சிறப்புரை ஆற்றினார். பாரதிக்கும் காந்திக்கும் இருக்கும் உறவையும் அவர் அழகாக எடுத்துக் கூறினார். இந்நிகழ்ச்சியில் தமிழ்த் துறைத் தலைவர் திரு.மா.விஜயகுமார் வரவேற்புரை ஆற்றினார்.மூன்றாமாண்டு வணிகவியல் நிறுமச் செயலாண்மைத் துறையைச் சார்ந்த லித்திகா பாரதியாரின் பாடலைப் பாடி அனைவரையும் மகிழ்வித்தார். இரண்டாமாண்டு கணினிப் பயன்பாட்டியல் துறையைச் சார்ந்த செல்வி.ரக்ஷிதா பாரதியின் பாடலுக்குப் பரதநாட்டியம் ஆடினார். இவ்விழா மாணவர்களின் திறமையையும் வெளிக்காட்ட உதவியது. இந்நிகழ்வு கிருஷ்ணா ஸ்வீட்ஸ் தலைமையில் திருமதி ரேகாமணி அவர்களின் நன்றியுரையுடன் இனிதே நிறைவடைந்தது.


எஸ்.ஏ. கலை மற்றும் அறிவியல் கல்லூரி, தமிழ்த்துறை நடத்திய காந்தி ஜெயந்தி மற்றும் மரபால் மலர்வோம் நிகழ்ச்சி 09.10.2024

மாணவர்களின் திறமைகளை வளர்ப்பதற்காக அக்டோபர் 9, 2024 அன்று காந்தி ஜெயந்தி மற்றும் மரபால் மலர்வோம் நிகழ்ச்சியைத் தமிழ்த்துறை நடத்தியது. இந்நிகழ்ச்சி மாணவர்களின் திறமைகளை வளர்ப்பதற்காக நிகழ்கிறது. இந்நிகழ்சசியின் சிறப்பு விருந்தினர், ஓய்வுபெற்ற தலைமையாசிரியர், காந்தியவாதி ,புலவர்க்கரசன் திரு.பொன்னரசன், மகாத்மா காந்தியைப் பற்றிய செய்திகளைத் துல்லியமாகப் பேசினார். இந்நிகழ்ச்சியை மாணவர்கள் சிறப்பாகக் கவனித்தனர். அதுமட்டுமின்றிப் பாடல், நாடகம், பேச்சு என மாணவர்கள் அவர்களுடைய தனித்திறமைகளைச் சிறப்பு விருந்தினர் முன்னிலையில் வெளிப்படுத்தினர். இந்நிகழ்ச்சி செம்மையாக நிறைவடைந்தது.


எஸ்.ஏ. கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் தமிழ்த்துறையும்,  நூலகத்துறையும் இணைந்து 'புத்தகம் பேசுது' என்ற நிகழ்ச்சி -29.08.2024

எஸ்.ஏ.கலை மற்றும் அறிவியல் கல்லூரி மாணவர்களின் திறன்களை மேம்படுத்துவதில் முன்னணி வகிக்கிறது. மாணவர்கள் தங்கள் அறிவுத்திறனை மேம்படுத்த புத்தகங்களை வாசிப்பது முக்கியத்துவம் வாய்ந்தது. அப்பழக்கம் தொடர்ச்சியான கற்றல் அனுபவத்தை மாணவர்களிடையே உருவாக்கும். அதைக் கருத்தில் கொண்டு மாணவர்களின் வாசிப்புத் திறனை மேம்படுத்தும் வண்ணம் எஸ்.ஏ. கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் தமிழ்த்துறையும்,  நூலகத்துறையும் இணைந்து 'புத்தகம் பேசுது' என்ற நிகழ்ச்சியை ஆகஸ்ட்  29,  2024 அன்று நண்பகல் 12 மணிக்குக் கல்லூரிக் கலையரங்கில் நடத்தியது. நிகழ்ச்சியின் சிறப்பு விருந்தினராக அண்ணா பல்கலைக்கழகப் பேராசிரியர் முனைவர் இ.கே.தி. சிவகுமார் அவர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தார். 

     மாதந்தோறும் நடைபெற உள்ள இந்நிகழ்ச்சியின் முதல் நிகழ்வாகப்  பாரதியார் கவிதைகள் மற்றும் பாரதிதாசன் கவிதைகள் ஆகிய இரண்டு நூல்களை எட்டு மாணவர்கள் விமர்சனம் செய்து உரை நிகழ்த்தினர். பாரதியார்,  பாரதிதாசன் ஆகியோர் கவிதைகளில் மூழ்கி முத்தெடுத்த சிந்தனைகளை அவையின் முன்வைத்தனர். சிறப்பு விருந்தினர் மாணவர்களின் நூல் விமர்சனத்தை மகிழ்ச்சியாகக் கேட்டு ரசித்ததோடு, நூலின் முக்கியத்துவம், வாசிப்புப் பழக்கத்தால் உண்டாகும் அறிவு நுகர்வு, நூல்களை வாசித்துத்  தாம் பெற்ற நுண்ணறிவு ஆகியவற்றை மாணவர்களின் முன் பகிர்ந்து, பல்துறை நூல்களைப் படிப்பதற்கு மாணவர்களை வலியுறுத்தினார். பல நூல்களைப் பயின்று மிகச்சிறந்த கற்றல் அனுபவத்தைப் பெற மிகப்பெரும் உந்துசக்தியைத் தருவதாக இந்நிகழ்ச்சி அமைந்தது குறிப்பிடத்தக்கது.