எஸ்.ஏ. கல்லூரியில் மாணவர்களின் வாசிப்புத் திறனை மேம்படுத்த புத்தகம் பேசுது நிகழ்ச்சி டிசம்பர் 23, 2025

எஸ்.ஏ. கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் தமிழ்த்துறை மாணவர்களின் வாசிப்புத் திறனை மேம்படுத்தும் வண்ணம் ‘ புத்தகம் பேசுது’ நிகழ்ச்சியை டிசம்பர் 23, 2025 அன்று கல்லூரிக் கலையரங்கில் நடத்தியது. சிறப்பு விருந்தினராகப் பட்டிமன்றப் பேச்சாளரும் கவிஞருமான இனியவன் கலந்து கொண்டு சிறப்பித்தார்.
தமிழ்துறை உதவிப் பேராசிரியர் முனைவர் பா.விக்னேஷ் குமார் வரவேற்புரை வழங்கினார். உதவிப் பேராசிரியர் திருமதி அ. விஜயலட்சுமி சிறப்பு விருந்தினரை அவைக்கு அறிமுகப்படுத்தினார். இன்றைய நவீன உலகில் ஒவ்வொருவரும் தம்மை மேம்படுத்திக் கொள்ளத் தம்மைத் தகுதிப்படுத்திக் கொள்வது இன்றியமையாதது. நாளும் நூல்கள் பல கற்றுப் பல்துறை அறிவைப் பெறுவது அவர்களின் அறிவை மட்டுமல்லாது அவர்களின் வளர்ச்சியையும் சிறக்கச் செய்யும். ஆதலால் மாணவர்களின் வாசிப்புத் திறனை மேம்படுத்தும் வண்ணம் ‘எனக்குப் பிடித்த புத்தகம் ‘ பற்றி எட்டு மாணவர்கள் தம் கருத்துகளை அழகாகப் பதிவு செய்தனர்.
அதனனத் தொடர்ந்து சிறப்பு விருந்தினர் கவிஞர் இனியவன் நூல் வாசிப்பின் பயன்கள், இலக்கியத் தேடல், நூல்களைத் தேர்வு செய்தல், பல்துறை அறிவு போன்ற பல்வேறு கருத்துகளை எடுத்துரைத்து, மாணவர்களிடத்து நூல்களைப் படிக்க வலியுறுத்தினார். நிகழ்ச்சியை தமிழ்த்துறைத் தலைவர் திரு மா. விஜயகுமார் மற்றும் உதவிப் பேராசிரியர் ரா. பிரியா ஆகியோர் அழகாக ஒருங்கிணைத்திருந்தனர். ரா. பிரியா நன்றியுரை வழங்கினார். முனைவர் சித்ரா நிகழ்ச்சியை மிகச் சிறப்பாகத் தொகுத்து வழங்கினார். மாணவர்களின் அறிவை மெருகூட்ட இந்நிகழ்ச்சி பெரிதும் உதவியது.