எஸ்.ஏ. கல்லூரியில் நடைபெற்ற திருமதி சகுந்தலா அம்மாள் நினைவு கலை இலக்கியப் போட்டிகள் ஜனவரி 4, 2025
எஸ்.ஏ. கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் தமிழ்த்துறை, பள்ளி மாணவர்களுக்காகத் திருமதி சகுந்தலா அம்மாள் நினைவு கலை இலக்கியப்போட்டிகளை ஆண்டுதோறும் நடத்தி வருகிறது. அவ்வண்ணமே இந்த ஆண்டும் சகுந்தலா அம்மாள் நினைவு கலை இலக்கியப் போட்டிகளை ஜனவரி 4, 2025 அன்று மிகச் சிறப்பாக நடத்தியது. 6,7,8 ஆம் வகுப்பு மாணவர்களுக்கும், 9 முதல் 12 ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கும் என இரு பிரிவுகளில் தமிழ்ப் பேச்சுப்போட்டி, ஓவியப் போட்டி, நடனப் போட்டி ஆகிய போட்டிகள் நடத்தப்பட்டன. கலை இலக்கியப் போட்டிகளின் தொடக்க விழாவிற்குச் சிறப்பு விருந்தினராகப் பிரபல ஊடகவியலாளரும், சென்னை அப்துர் ரஹ்மான் கிரசண்ட் தொழில்நுட்ப நிறுவன தமிழ்ப் பேராசிரியருமான முனைவர் அ. நசீமா கலந்து கொண்டு சிறப்பித்தார்.
தொடக்க விழா கல்லூரித் தாளாளர் திரு. ப. வெங்கடேஷ் ராஜா அவர்கள் பேராதரவோடு சிறப்பாக நடைபெற்றது. விழாவில் கல்லூரி இயக்குநர் முனைவர் சாய் சத்யவதி கவிதை வாசித்துக் கருத்துரை வழங்கினார். முதல்வர் முனைவர் மாலதி செல்வக்குமார் வாழ்த்துரை வழங்கினார். தமிழ்த்துறை உதவிப் பேராசிரியர் திருமதி அ. விஜயலட்சுமி வரவேற்புரை வழங்க, தமிழ்த்துறைத் தலைவர் திரு. மா. விஜயகுமார் போட்டிகளில் கலந்து கொள்ளும் பள்ளிகளைக் குறித்து அறிமுக உரை நிகழ்த்தினார். உதவிப் பேராசிரியர் பிரியா சிறப்பு விருந்தினர் குறித்த அறிமுக உரையையும், உதவிப் பேராசிரியர் முனைவர் ஏ. சித்ரா நன்றியுரையையும் நிகழ்த்தினர். இணைப் பேராசிரியர் முனைவர் ஈ.இசக்கியம்மாள் இணைப்புரை வழங்கி நிகழ்ச்சியைத்தொகுத்து வழங்கினார்.தமிழ்த்துறைப் பேராசிரியர்களின் சிறப்பான ஒருங்கிணைப்பின்படி நடைபெற்ற இப்போட்டிகளில் சென்னைப் பெருநகரில் உள்ள 76 பள்ளிகளைச் சேர்ந்த 284 மாணவர்கள் கலந்து கொண்டனர். போட்டிகளில் கலந்து கொண்ட அனைத்து மாணவர்களுக்கும் பங்கேற்புச் சான்றிதழ் வழங்கப்பட்டன. கலை இலக்கியப் போட்டியின் பரிசளிப்பு விழா விரைவில் நடைபெறும்.