எஸ்.ஏ. கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் திறன்வளர் நிகழ்வு ஆகஸ்ட் 1, 2025
எஸ்.ஏ. கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் திறன்வளர் நிகழ்வு
எஸ்.ஏ. கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் தமிழ்த்துறை மாணவர்களின் தனித்திறன்களை மேம்படுத்தும் நோக்கில் மாணவர் திறன்வளர் நிகழ்வுகளை நடத்தி வருகிறது. அவ்வகையில் மாணவர்களின் பேச்சுத் திறனை மேம்படுத்தும் நோக்கில் ‘நீங்களும் பேச்சாளர் ஆகலாம்’ என்ற திறன்வளர் நிகழ்வு ஆகஸ்ட் 1, 2025 அன்று கல்லூரித் திரையரங்கில் நடைபெற்றது. எத்திராஜ் மகளிர் கல்லூரி தமிழ்த்துறை உதவிப் பேராசிரியர் முனைவர் ம. எஸ்தர் ஜெகதீசுவரி சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு சிறப்பித்தார்.
சிறந்த பேச்சாளருக்கு அவையை தன்வயப்படுத்தும் திறன், செறிந்த தகவல்கள், தெளிவான உச்சரிப்பு, ஈர்க்கும் உரை வீச்சு, மிகச் சிறந்த கண்ணோட்டம் ஆகிய பண்புகள் இன்றியமையாதன என்று வலியுறுத்தினார். டாக்டர் அப்துல் கலாம், இரா.பி. சேதுப்பிள்ளை, பேரறிஞர் அண்ணா, கலைஞர் மு. கருணாநிதி, சுகிசிவம் போன்ற மிகச் சிறந்த பேச்சாளர்களை மாணவர்களுக்கு அறிமுகப்படுத்தி, அவர்களின் மிகச் சிறந்த பேச்சுத் திறனை சான்றுகளுடன் எடுத்துரைத்தார். சிறப்பு விருந்தினரின் உரையைக் கேட்ட மாணவர்கள் சிறந்த பேச்சாளராக உருவாவதற்கான உந்துதலைப் பெற்றனர். மாணவர்களின் பேச்சுத்திறனை இனங்கண்டு, அவர்களின் பேச்சுத் திறனை மேம்படுத்த இந்நிகழ்ச்சி களம் அமைத்துக் கொடுத்தது சிறப்புக்குரியது.