எஸ்.ஏ. கல்லூரியில் திருமதி சகுந்தலா அம்மாள் நினைவு கலை இலக்கியப் போட்டிகள் பரிசளிப்பு விழா 30.01.2025

எஸ்.ஏ. கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் தமிழ்த்துறை,  திருமதி சகுந்தலா அம்மாள் நினைவு மற்றும் பொங்கல் விழா பள்ளி மாணவர்களுக்கான கலை இலக்கியப் போட்டிகளை ஜனவரி 4,  2025 அன்று நடத்தியது. கலை இலக்கியப் போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கான பரிசளிப்பு விழா ஜனவரி 30,  2025 அன்று கல்லூரிக் கலையரங்கில் நடைபெற்றது. சிறப்பு விருந்தினராகச் சென்னை உயர்நீதிமன்ற மேனாள்  நீதிபதி மாண்பமை நீதியரசர் முனைவர் ப. ஜோதிமணி அவர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தார். கல்லூரித் தாளாளர் திரு. ப. வெங்கடேஷ் ராஜா அவர்களின் தலைமையில் பரிசளிப்பு விழா மிகச் சிறப்பாக நடைபெற்றது. இளம் வணிகவியல் முதலாம் ஆண்டு மாணவர் ர.ஹே. கிஷோர் வரவேற்புரை நிகழ்த்தினார்.‌ கல்லூரி இயக்குநர் முனைவர் சாய் சத்யவதி முன்னிலை உரை நிகழ்த்தினார். கல்லூரி முதல்வர் முனைவர் மாலதி செல்வக்குமார் வாழ்த்துரை வழங்கினார். போட்டி பற்றிய அறிகையைத்  தமிழ்த்துறைத் தலைவர் திரு. மா.விஜயகுமார் வாசித்தார்.‌

சிறப்பு விருந்தினர் மாண்பமை நீதியரசர் முனைவர் ப.  ஜோதிமணி அவர்கள் ஒழுக்கத்தின் மாண்பினையும், சுற்றுச்சூழல் பாதுகாப்பையும் பற்றிக் குறிப்பிட்டு இயற்கை வளங்களைக் காக்குமாறு அவையோரை வலியுறுத்தினார். அதைத்தொடர்ந்து போட்டிகளில் பரிசு பெற்ற மாணவர்களின் உரைகளும்,  நடனங்களும் நடைபெற்றன. போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்குச் சான்றிதழ்களும், பரிசுத் தொகையும்,  நூல்களும் பரிசுகளாக வழங்கப்பட்டன. இளம் வணிகவியல் கணினிப் பயன்பாட்டியல் துறை இரண்டாம் ஆண்டு மாணவி ஜா. ஷபரிதா நன்றியுரை வழங்கினார்.  இளம் வணிகவியல் முதலாம் ஆண்டு மாணவியர் ரா. கீர்த்திகா மற்றும் ஷாசின் பாத்திமா ஆகியோர் நிகழ்ச்சியை அழகுறத் தொகுத்து வழங்கினர். பள்ளி மாணவர்களின் கலைத்திறனையும் படைப்பாக்கத் திறனையும் ஊக்குவிக்கும் வண்ணம் இந்நிகழ்ச்சி மிகச் சிறப்பாக நடைபெற்றது.