எஸ்.ஏ. கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் தமிழ்த் துறையின் சார்பிலும் காட்சித் தொடர்பியல் துறை சார்பிலும் ஜெம் டிவியோடு இணைந்து மாபெரும் பொங்கல் சிரிப்பு சிந்தனைப் பட்டிமன்றம் 7.1.2025 அன்று நடைபெற்றது.

எஸ்.ஏ கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் பொங்கல் பட்டிமன்றம்.

திருவேற்காடு எஸ்.ஏ. கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் தமிழ்த் துறையின் சார்பிலும் காட்சித் தொடர்பியல் துறை சார்பிலும் ஜெம் டிவியோடு இணைந்து மாபெரும் பொங்கல் சிரிப்பு சிந்தனைப் பட்டிமன்றம் 07.01.2025 அன்று நடைபெற்றது.

தேவகோட்டை சேவகன் அண்ணாமலை கல்லூரியின் தமிழ்த் துறைத் தலைவர் திரு.பாகை கண்ணதாசன் அவர்கள் நடுவராகப் பொறுப்பேற்றுப் பண்பாட்டைக் கட்டிக் காப்பது கிராமமா? நகரமா? என்னும் தலைப்பிலான பட்டிமன்றத்திற்குச்சுவை கூட்டினார். இரு அணிகளும் பிரபல தொலைக்காட்சிப் பேச்சாளர்கள் பேராசிரியர் அன்பு கவிஞர் நித்தியப்பிரியா, திரு. தேவகோட்டை லட்சுமி நாராயணன், திரு. டோக்கியோ ராமநாதன், திருமதி. கல்பனா தர்மேந்திரா, செல்வி சாகித்யா ஆகியோர் மிகச் சிறப்பாகத் தங்கள் கருத்துக்களை எடுத்துரைத்தனர்.

சிரிப்பும் சிந்தனையும் நிறைந்த இப்பட்டிமன்றத்தைக் கல்லூரி மாணவர்கள் வெகுவாக ரசித்தனர். இந்த நிகழ்ச்சிக்குக் கல்லூரியினுடைய தாளாளர் திரு. ப. வெங்கடேஷ் ராஜா அவர்கள் தலைமை தாங்கினார். கல்லூரி இயக்குநர் முனைவர் சாய் சத்யவதி அவர்களும் கல்லூரி முதல்வர் மாலதி செல்வக்குமார் அவர்களும்  இப்பட்டிமன்றத்திற்கு வருகை தந்தோரை வரவேற்றனர். கல்லூரியின் சார்பாகப் பேச்சாளர்கள் அனைவருக்கும் நினைவுப் பரிசுகள் வழங்கப்பட்டன. விழா நிறைவில் தமிழ்த் துறைத் தலைவர் பேராசிரியர் மா. விஜயகுமார் நன்றியுரை வழங்கினார்.


எஸ்.ஏ. கல்லூரியில் நடைபெற்ற திருமதி சகுந்தலா அம்மாள் நினைவு கலை இலக்கியப் போட்டிகள் ஜனவரி 4,  2025

எஸ்.ஏ. கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் தமிழ்த்துறை,  பள்ளி மாணவர்களுக்காகத் திருமதி சகுந்தலா அம்மாள் நினைவு கலை இலக்கியப்போட்டிகளை ஆண்டுதோறும் நடத்தி வருகிறது. அவ்வண்ணமே இந்த ஆண்டும் சகுந்தலா அம்மாள் நினைவு கலை இலக்கியப் போட்டிகளை ஜனவரி 4,  2025 அன்று மிகச் சிறப்பாக நடத்தியது. 6,7,8 ஆம் வகுப்பு மாணவர்களுக்கும், 9 முதல் 12 ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கும் என இரு பிரிவுகளில் தமிழ்ப்  பேச்சுப்போட்டி, ஓவியப் போட்டி, நடனப் போட்டி ஆகிய போட்டிகள் நடத்தப்பட்டன. கலை இலக்கியப் போட்டிகளின் தொடக்க விழாவிற்குச் சிறப்பு விருந்தினராகப் பிரபல ஊடகவியலாளரும், சென்னை அப்துர் ரஹ்மான் கிரசண்ட்  தொழில்நுட்ப நிறுவன தமிழ்ப் பேராசிரியருமான முனைவர் அ. நசீமா கலந்து கொண்டு சிறப்பித்தார்.      

     தொடக்க விழா கல்லூரித் தாளாளர் திரு. ப. வெங்கடேஷ் ராஜா அவர்கள் பேராதரவோடு சிறப்பாக நடைபெற்றது. விழாவில் கல்லூரி இயக்குநர் முனைவர் சாய் சத்யவதி கவிதை வாசித்துக் கருத்துரை வழங்கினார். முதல்வர்  முனைவர் மாலதி செல்வக்குமார் வாழ்த்துரை  வழங்கினார். தமிழ்த்துறை உதவிப் பேராசிரியர் திருமதி அ.  விஜயலட்சுமி வரவேற்புரை வழங்க, தமிழ்த்துறைத் தலைவர் திரு. மா. விஜயகுமார் போட்டிகளில் கலந்து கொள்ளும் பள்ளிகளைக் குறித்து அறிமுக உரை நிகழ்த்தினார்.  உதவிப் பேராசிரியர் பிரியா சிறப்பு விருந்தினர் குறித்த அறிமுக உரையையும், உதவிப் பேராசிரியர் முனைவர் ஏ. சித்ரா நன்றியுரையையும்  நிகழ்த்தினர். இணைப் பேராசிரியர் முனைவர் ஈ.இசக்கியம்மாள் இணைப்புரை வழங்கி நிகழ்ச்சியைத்தொகுத்து வழங்கினார்.தமிழ்த்துறைப் பேராசிரியர்களின் சிறப்பான ஒருங்கிணைப்பின்படி நடைபெற்ற இப்போட்டிகளில் சென்னைப் பெருநகரில் உள்ள 76 பள்ளிகளைச் சேர்ந்த  284 மாணவர்கள் கலந்து கொண்டனர். போட்டிகளில் கலந்து கொண்ட அனைத்து மாணவர்களுக்கும் பங்கேற்புச் சான்றிதழ் வழங்கப்பட்டன. கலை இலக்கியப் போட்டியின்  பரிசளிப்பு விழா விரைவில் நடைபெறும்.


எஸ். ஏ கலை மற்றும் அறிவியல் கல்லூரி தமிழ்த்துறை மற்றும் கிருஷ்ணா ஸ்வீட்ஸ் இணைந்து நடத்திய மகாகவி பாரதியார் பிறந்த நாள் சிறப்பு நிகழ்ச்சி டிசம்பர் 12, 2024

எஸ். ஏ. கலை மற்றும் அறிவியல் கல்லூரி தமிழ்த்துறை மற்றும் கிருஷ்ணா ஸ்வீட்ஸ் இணைந்து நடத்திய மகாகவி பாரதியார் பிறந்த நாள் சிறப்பு நிகழ்ச்சி

டிசம்பர் 12, 2024 அன்று எஸ். ஏ. கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் பாரதியின் பிறந்தநாளிற்கு "மெல்லிய தமிழுக்கு மீசை முளைத்தது" என்ற தலைப்பில் பேராசிரியர் திரு. த. அன்பு (எம்.ஜி.ஆர் நிகர்நிலைப் பல்கலைக்கழகம்) அவர்கள் சிறப்புரை ஆற்றினார். பாரதிக்கும் காந்திக்கும் இருக்கும் உறவையும் அவர் அழகாக எடுத்துக் கூறினார். இந்நிகழ்ச்சியில் தமிழ்த் துறைத் தலைவர் திரு.மா.விஜயகுமார் வரவேற்புரை ஆற்றினார்.மூன்றாமாண்டு வணிகவியல் நிறுமச் செயலாண்மைத் துறையைச் சார்ந்த லித்திகா பாரதியாரின் பாடலைப் பாடி அனைவரையும் மகிழ்வித்தார். இரண்டாமாண்டு கணினிப் பயன்பாட்டியல் துறையைச் சார்ந்த செல்வி.ரக்ஷிதா பாரதியின் பாடலுக்குப் பரதநாட்டியம் ஆடினார். இவ்விழா மாணவர்களின் திறமையையும் வெளிக்காட்ட உதவியது. இந்நிகழ்வு கிருஷ்ணா ஸ்வீட்ஸ் தலைமையில் திருமதி ரேகாமணி அவர்களின் நன்றியுரையுடன் இனிதே நிறைவடைந்தது.


எஸ்.ஏ. கலை மற்றும் அறிவியல் கல்லூரி, தமிழ்த்துறை நடத்திய காந்தி ஜெயந்தி மற்றும் மரபால் மலர்வோம் நிகழ்ச்சி 09.10.2024

மாணவர்களின் திறமைகளை வளர்ப்பதற்காக அக்டோபர் 9, 2024 அன்று காந்தி ஜெயந்தி மற்றும் மரபால் மலர்வோம் நிகழ்ச்சியைத் தமிழ்த்துறை நடத்தியது. இந்நிகழ்ச்சி மாணவர்களின் திறமைகளை வளர்ப்பதற்காக நிகழ்கிறது. இந்நிகழ்சசியின் சிறப்பு விருந்தினர், ஓய்வுபெற்ற தலைமையாசிரியர், காந்தியவாதி ,புலவர்க்கரசன் திரு.பொன்னரசன், மகாத்மா காந்தியைப் பற்றிய செய்திகளைத் துல்லியமாகப் பேசினார். இந்நிகழ்ச்சியை மாணவர்கள் சிறப்பாகக் கவனித்தனர். அதுமட்டுமின்றிப் பாடல், நாடகம், பேச்சு என மாணவர்கள் அவர்களுடைய தனித்திறமைகளைச் சிறப்பு விருந்தினர் முன்னிலையில் வெளிப்படுத்தினர். இந்நிகழ்ச்சி செம்மையாக நிறைவடைந்தது.


எஸ்.ஏ. கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் தமிழ்த்துறையும்,  நூலகத்துறையும் இணைந்து 'புத்தகம் பேசுது' என்ற நிகழ்ச்சி -29.08.2024

எஸ்.ஏ.கலை மற்றும் அறிவியல் கல்லூரி மாணவர்களின் திறன்களை மேம்படுத்துவதில் முன்னணி வகிக்கிறது. மாணவர்கள் தங்கள் அறிவுத்திறனை மேம்படுத்த புத்தகங்களை வாசிப்பது முக்கியத்துவம் வாய்ந்தது. அப்பழக்கம் தொடர்ச்சியான கற்றல் அனுபவத்தை மாணவர்களிடையே உருவாக்கும். அதைக் கருத்தில் கொண்டு மாணவர்களின் வாசிப்புத் திறனை மேம்படுத்தும் வண்ணம் எஸ்.ஏ. கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் தமிழ்த்துறையும்,  நூலகத்துறையும் இணைந்து 'புத்தகம் பேசுது' என்ற நிகழ்ச்சியை ஆகஸ்ட்  29,  2024 அன்று நண்பகல் 12 மணிக்குக் கல்லூரிக் கலையரங்கில் நடத்தியது. நிகழ்ச்சியின் சிறப்பு விருந்தினராக அண்ணா பல்கலைக்கழகப் பேராசிரியர் முனைவர் இ.கே.தி. சிவகுமார் அவர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தார். 

     மாதந்தோறும் நடைபெற உள்ள இந்நிகழ்ச்சியின் முதல் நிகழ்வாகப்  பாரதியார் கவிதைகள் மற்றும் பாரதிதாசன் கவிதைகள் ஆகிய இரண்டு நூல்களை எட்டு மாணவர்கள் விமர்சனம் செய்து உரை நிகழ்த்தினர். பாரதியார்,  பாரதிதாசன் ஆகியோர் கவிதைகளில் மூழ்கி முத்தெடுத்த சிந்தனைகளை அவையின் முன்வைத்தனர். சிறப்பு விருந்தினர் மாணவர்களின் நூல் விமர்சனத்தை மகிழ்ச்சியாகக் கேட்டு ரசித்ததோடு, நூலின் முக்கியத்துவம், வாசிப்புப் பழக்கத்தால் உண்டாகும் அறிவு நுகர்வு, நூல்களை வாசித்துத்  தாம் பெற்ற நுண்ணறிவு ஆகியவற்றை மாணவர்களின் முன் பகிர்ந்து, பல்துறை நூல்களைப் படிப்பதற்கு மாணவர்களை வலியுறுத்தினார். பல நூல்களைப் பயின்று மிகச்சிறந்த கற்றல் அனுபவத்தைப் பெற மிகப்பெரும் உந்துசக்தியைத் தருவதாக இந்நிகழ்ச்சி அமைந்தது குறிப்பிடத்தக்கது.